மகாராஷ்டிராவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானுக்கு இந்தியா ‘ஏ’ அணியில் இடம் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.
28 வயதான சர்பராஸ் கான், உள்ளூர் முதல்தர போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். ஆரம்பகாலத்தில் அதிக உடல் எடையுடன் காணப்பட்டதால் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. எனினும், தன்னுடைய கடின உழைப்பால் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமானார்.
அதன்பின் நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் விளையாடிய அவர், பிப்ரவரி முதல் நவம்பர் வரை 6 போட்டிகளில் 11 இன்னிங்சில் பேட்டிங் செய்து, 1 சதம், 3 அரைசதங்களுடன் மொத்தம் 371 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 37.10 ஆகும்.
ஆனால், அதன் பின் அவருக்கு எந்தவித வாய்ப்பும் வழங்கப்படவில்லை. சமீபத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிரான இந்தியா ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டது. அதில் சர்பராஸ் கானுக்கு இடம் வழங்கப்படாதது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியது.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரான ஷமா முகமது சமூக ஊடகத்தில் பதிவு வெளியிட்டு, “சர்பராஸ் கான் முஸ்லிம் என்பதால் அவருக்கு இந்தியா ‘ஏ’ அணியில் இடம் வழங்கப்படவில்லை. இதற்கான காரணம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் நிலைப்பாடு என்று எங்களுக்குத் தெரியும்,” என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலளித்த பாஜக தலைவர் ஷெஹ்சாத் பூனவல்லா, “ஷமா முகமதுவும், அவருடைய கட்சியும் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர். ரோகித் சர்மாவை உடல்மீது கேலி செய்த பிறகு, இப்போது நமது அணியை மத அடிப்படையில் பிரிக்க முயல்கிறார்களா? இந்தியாவை பிரித்த பிறகும் அவர்களுக்கு திருப்தி இல்லை போலிருக்கிறது,” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: அதே அணியில் முகமது சிராஜ் மற்றும் கலீல் அகமது போன்ற வீரர்கள் உள்ளனர். இந்தியாவை மத அல்லது சாதி அடிப்படையில் பிரிப்பதை நிறுத்துங்கள்,” என்றார்.
குறிப்பாக, இதற்கு முன்பும் ஷமா முகமது, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை “பருத்த உடல் கொண்டவர்” எனக் கூறி சர்ச்சையில் சிக்கியிருந்தார். அதையடுத்து, அவர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
