கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு அருகே கங்கொண்டனஹள்ளியில் வசித்து வரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் மீது ஐந்து பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு, அந்த இளம்பெண்ணின் வீட்டில் புகுந்த கும்பல், அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததுடன், வீட்டில் இருந்த ரூ.25 ஆயிரம் பணமும், இரண்டு செல்போன்களையும் பறித்து தப்பி ஓடியது.

தொடர்ந்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் போலீசில் புகார் அளித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நடவடிக்கையின் பேரில், கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள இருவரையும் தேடி போலீசார் தீவிரமாக வலைவீசி வருகின்றனர்.

இது தொடர்பாக டி.எஸ்.பி. மட்டத்திலான அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் நீதிமன்றம் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.