பஹ்ரைனில் நடைபெற்ற தனியார் கபடி போட்டியில் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக, பாகிஸ்தான் சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு காலவரையற்ற தடையுடன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி பஹ்ரைனில் ‘ஜிசிசி கோப்பை’ என்ற பெயரில் நடைபெற்ற இத்தொடரில், ‘இந்தியா’ எனப் பெயரிடப்பட்ட அணிக்காக ராஜ்புத் களம் இறங்கியதுடன், இந்திய தேசியக் கொடியை ஏந்தி வெற்றியைத் தழுவிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

கூட்டமைப்பின் அனுமதியின்றி வெளிநாடு சென்று விளையாடியது மற்றும் நாட்டின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட்டது ஆகிய காரணங்களுக்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ராஜ்புத், தான் விளையாடப்போகும் அணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டது.

தனக்கு முன்கூட்டியே தெரியாது என்றும், ஒருங்கிணைப்பாளர்களிடம் இரு நாடுகளின் பெயர்களைப் பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை என்றும், இது முற்றிலும் ஒரு தவறான புரிதல் என்றும் கூறி மன்னிப்புக் கோரியுள்ளார்.