1865-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பன்பரி (Bunbury) என்ற இடத்தில் ஒரு கிரிக்கெட் போட்டி நடந்ததாகக் கூறப்படுகிறது. போட்டியின் முதல் பந்திலேயே பேட்ஸ்மேன் பந்தை ஓங்கி அடிக்க, அது மைதானத்தில் இருந்த ஒரு பெரிய ஜர்ரா (Jarrah) மரத்தின் கிளைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது. பந்து கண்ணுக்குத் தெரிந்ததால், நடுவர்கள் அதை ‘லாஸ்ட் பால்’ (Lost Ball) என அறிவிக்க மறுத்துவிட்டனர்.
பந்தை மரத்திலிருந்து எடுக்க வழியில்லாததால், கடைசியாக ஒரு துப்பாக்கியைக் கொண்டு வந்து பந்தை நோக்கிச் சுட்டிருக்கிறார்கள். பல முயற்சிகளுக்குப் பிறகு பந்து கீழே விழுந்தது. ஆனால், பந்து மரத்தில் சிக்கியிருந்த அந்த நேரத்தில், பேட்ஸ்மேன்கள் பிட்ச்சிற்கு இடையே ஓடி 286 ரன்களைக் கடந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் மூலம் 6 கிலோமீட்டர் தூரத்திற்கும் அதிகமாக அவர்கள் ஓடியிருக்க வேண்டும்.
இந்தச் செய்தி லண்டன் செய்தித்தாள்களில் வெளிவந்தாலும், இதற்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வமான ஆதாரமும் இல்லை. ஆஸ்திரேலிய ஊடகங்கள் இதனை ஒரு “கற்பனைக் கதை” என்றே ஒதுக்கிவிட்டன. இருப்பினும், கிரிக்கெட் ரசிகர்களிடையே இன்றும் ஒரு சுவாரஸ்யமான புனைக்கதையாக இது பேசப்பட்டு வருகிறது.
