பெங்களூருவின் அப்பிகெரே பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் அவரது மனைவி ஆகியோர், ஒரு முஸ்லிம் இளைஞரை மத ரீதியாக இழிவுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞரை “நீ முஸ்லிம், பாகிஸ்தானி, ஒரு பயங்கரவாதி” என்று அந்தத் தம்பதியினர் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தனது நண்பர்களுடன் வந்து அந்தத் தம்பதியினரை அவர்களின் வீட்டின் வாசலிலேயே வைத்து சரமாரியாகக் கேள்வி கேட்டுள்ளார். இந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

​அந்த வீடியோவில், வெள்ளைச் சட்டை அணிந்த இளைஞர் ஒருவர் அந்த முன்னாள் ராணுவ அதிகாரியை நோக்கி, “இது என்ன உங்கள் அப்பன் வீட்டு நாடா? இது எல்லோருக்கும் பொதுவான நாடு. நீங்கள் ராணுவத்தில் இருந்தவர், உங்களுக்குத் தான் தேசப்பற்று அதிகமாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது உங்கள் மனைவி எப்படி ஒருவரைப் பார்த்து தீவிரவாதி என்று சொல்லலாம்?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்புகிறார். மேலும், இது கர்நாடகா என்றும், இங்கு மதப் பிரிவினையைத் தூண்ட வேண்டாம் என்றும் எச்சரித்த அவர், மீண்டும் இதுபோல நடந்தால் அப்பார்ட்மெண்டிற்குள் புகுந்து நடுரோட்டில் இழுத்து வந்து அவமானப்படுத்துவோம் என ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்தார். இளைஞர்களின் இந்த அதிரடி எதிர்ப்பையடுத்து, அந்தத் தம்பதியினர் தங்கள் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டதை அடுத்து பதற்றம் தணிந்தது.