சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ரவி (52) மற்றும் அவரது மகன் அய்யனார் (21) ஆகியோர் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், சென்னை யானைக்கவுனி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 45 அடி ஆழம் கொண்ட கிணற்றைத் தூர்வாரும் பணியில் தந்தை மற்றும் மகன் இருவரும் ஈடுப்பட்டனர். இதற்காக அய்யனார் கயிறு கட்டி கிணற்றின் அடிப்பகுதிக்கு இறங்கியபோது, அங்குப் பரவியிருந்த விஷவாயுவைச் சுவாசித்ததால் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கிச் சரிந்தார்.
மகன் நீண்ட நேரமாகியும் மேலே வராததைக் கண்டு சந்தேகமடைந்த தந்தை ரவி, கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது மகன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மகனை மீட்கும் பதற்றத்தில் அவரும் கயிற்றைப் பிடித்துக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கிணற்றின் அடிப்பகுதியில் அடர்த்தியாக இருந்த விஷவாயு ரவியையும் தாக்கியதால், அவரும் அதே இடத்தில் பரிதாபமாக மயங்கி விழுந்தார்.
இதற்கிடையில் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் முகமூடி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றுக்குள் இறங்கி நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கிணற்றுக்குள் இறங்கிய தந்தை மற்றும் மகன் விஷவாயு தாக்கி உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
