முதல் உலகப் போரின் கொடூரத்தை நேரில் சந்தித்தும், அதிலிருந்து மீண்டு வந்து கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென இடம்பிடித்தவர் இங்கிலாந்தின் ஹாரி லீ. 1915-ல் பிரான்ஸில் நடந்த போரில் அவரது காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. போர்க்களத்தில் பல நாட்கள் உயிருக்கு போராடிய அவரை, அவர் இறந்துவிட்டதாக நினைத்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், அவருக்காக நினைவு நிகழ்வும் நடத்தப்பட்டது. ஆனால் ஜெர்மன் படையினர் அவரை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

போரில் ஏற்பட்ட காயத்தால் அவரது ஒரு கால் நிரந்தரமாக சுருங்கிய நிலையில் இருந்தது. இனி கிரிக்கெட் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தபோதும், ஹாரி லீ மனம் தளரவில்லை. அதன்பிறகு இந்தியாவுக்கு பயணம் செய்ய இருந்தபோது, அவர் செல்ல வேண்டிய ‘நியான்சா’ கப்பல் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. பின்னர் அந்தக் கப்பல் டார்பிடோ தாக்குதலுக்கு உள்ளாகி 49 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஹாரி லீ இரண்டாவது முறையாக மரணத்திலிருந்து தப்பினார்.

இந்தியாவில் கூச் பிஹார் மகாராஜாவின் கிரிக்கெட் பயிற்சியாளராக பணியாற்றிய அவர், 1918-ல் மீண்டும் முதல் தர கிரிக்கெட்டுக்கு திரும்பினார். 1919-ல் இங்கிலாந்து திரும்பி மிடில்செக்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கிய அவர், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரே ஒரு சர்வதேச போட்டி மட்டுமே விளையாடியிருந்தாலும், 40 வயதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் அறிமுகம் பெற்றார்.

ஹாரி லீ தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையில் 437 போட்டிகளில் 20,158 ரன்களையும் 401 விக்கெட்டுகளையும் குவித்துள்ளார். இதில் 38 சதங்களும் அடங்கும். போரில் மரணத்துக்கு அருகில் சென்று மீண்டவர், பின்னர் இவ்வளவு நீண்ட கிரிக்கெட் பயணத்தை உருவாக்கியது அவரது மன உறுதியின் சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.