உத்தரப் பிரதேச மாநிலம், புலந்தஷார் மாவட்டம், பஹ்லிம்புரா கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவரின் மனைவி ப்ரீத்தி, தனது கணவரைக் கொன்ற குற்றத்திற்காகப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்த கிருஷ்ண குமார், மனைவியின் கள்ளத்தொடர்பைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ப்ரீத்தி, 8 வயது மகள் கண்முன்னேயே கணவரின் கழுத்தை துண்டால் நெரித்துக் கொலை செய்துள்ளார்.

கொலைக்குப் பிறகு, உறவினர்கள் வருவதற்குள் சடலம் அவசர அவசரமாக இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடுகளைச் செய்ய ப்ரீத்தி முயன்றுள்ளார். ஆனால், அங்கு வந்த உறவினர்கள் கிருஷ்ண குமாரின் கழுத்தில் காயங்கள் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்து 112 என்ற அவசர எண்ணிற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிருஷ்ண குமாருக்குச் சொந்தமான ரூ. 35 லட்சம் மதிப்பிலான நிலம் மற்றும் வீட்டை விற்றுவிட்டு, தனது கள்ளக்காதலனுடன் தப்பிச் செல்ல ப்ரீத்தி திட்டமிட்டிருந்ததாக இறந்தவரின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். விசாரணையின் போது, கணவர் தினமும் குடித்துவிட்டுத் தன்னைத் தாக்கியதால் பொறுமையிழந்து கொலை செய்ததாகப் ப்ரீத்தி ஒப்புக்கொண்டதாக நகர காவல் கண்காணிப்பாளர் பிரகர் பாண்டே தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துண்டை மீட்ட காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட ப்ரீத்தி, தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.