ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டம் கோபால்பூர் கிராமத்தில் காட்டுப்பன்றி ஒன்று திடீரெனத் தாக்கியதை அடுத்து, சற்றும் பதறாமல் அதன் கழுத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகப் போராடிய 14 வயது சிறுவனின் சாகசச் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கட்டாக் மாவட்டத்தின் தம்படா தொகுதிக்குட்பட்ட கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சுமன் பெகாரா. கிராமத்திற்கு அருகில் உள்ள நாடிகுண்டா கால்வாய் பகுதிக்குச் சென்றிருந்தான். அங்கு இயற்கைக் கடன்களை முடித்துவிட்டு, கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தபோது புதருக்குள்ளிருந்து திடீரெனப் பாய்ந்து வந்த பெரிய காட்டுப்பன்றி ஒன்று அவன் மீது தாக்குதல் நடத்தியது.
தன்னைத் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் கால்வாயில் உள்ள முழங்கால் அளவு நீரில் சிறுவன் குதித்தான். ஆனால், அந்தப் பன்றி விடாமல் நீரிலும் அவனைத் துரத்திப் பாய்ந்தது.
Wild Boar Attacks Boy.. Two-Hour Battle
Incident in Gopalpur Village, #Cuttack District, #Odisha
While bathing in the canal.. a wild boar attacks a boy (14)
The boy, without getting scared.. fought back against the wild boar
Fought with it for nearly 2 hours and saved his… pic.twitter.com/iMJy4bfwue
— Siraj Noorani (@sirajnoorani) August 26, 2026
கோரைப் பற்களுடன் ஆக்ரோஷமாகத் தாக்கிய காட்டுப்பன்றியிடம் இருந்து தப்பிக்க, சுமன் துணிச்சலுடன் அதனுடன் போராடினான். பன்றி தப்பியோடவோ அல்லது மீண்டும் தாக்கவோ முடியாதபடி அதன் கழுத்தைப் பலமாகத் தன் கைகளால் இறுகப் பிடித்துக் கொண்டான். முழங்கால் அளவு நீருக்குள் நின்றுகொண்டே சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் பன்றியை அசைய விடாமல் அவன் போராடிய விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
இதற்கிடையில் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், அங்கிருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் இருந்த தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கண் முன்னால் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. சிறுவன் சுமை சற்றும் தளராமல் காட்டுப்பன்றியின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு அதனுடன் போராடிக் கொண்டிருந்தான்.
தீயணைப்பு வீரர்கள் காப்பாற்ற முயன்றபோது, பன்றி தப்பிக்க இன்னும் அதிக பலத்துடன் போராடியது. இருப்பினும், சற்றும் பயமின்றி அந்தச் சிறுவன் பன்றியின் பிடியை விடவே இல்லை. இதனையடுத்து தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் பன்றி மீட்கப்பட்டு, சிறுவனும் பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்டான். காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது பூரண நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
