திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில், நள்ளிரவில் புகுந்த மர்ம கும்பல் ஒன்று ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் வெல்டிங் மூலம் தகர்த்து எறிந்து, அதற்குள் இருந்த சுமார் 11 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பிற்கு ஆட்கள் யாரும் இல்லாத நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த மர்ம நபர்கள், அதிநவீன கேஸ் வெல்டிங் கருவிகளைக் கொண்டு மிகத் துல்லியமாக ஏடிஎம் இயந்திரத்தை கட் செய்து பணப் பெட்டியை உடைத்துள்ளனர். பின்னர் அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.11 லட்சம் ரொக்கப் பணத்தை அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து கொள்ளை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் கடந்த 3 நாட்களுக்குள் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியிலும், தொழிலதிபர்கள் மத்தியிலும் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையின் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
