சென்னையை அடுத்த சௌகார்பேட்டை பகுதியில் கிணற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது, நச்சு வாயு தாக்கியதில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (55) மற்றும் அவரது மகன் ஐயனார் (25) ஆகியோர், கொளத்தூர் அருகே உள்ள சின்னதுரை மடம் பகுதியில் வசித்து வந்தனர். சௌகார்பேட்டையில் உள்ள எல கந்தப்பன் வீதி அருகில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் பிரசாந்த் என்பவருக்குச் சொந்தமான கிணற்றைச் சீரமைக்கும் பணியை இருவரும் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தன்று கிணற்றினுள் இறங்கிய மூத்தவரான ரவி, வண்டல் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நச்சு வாயு தாங்கி மயங்கி விழுந்து நீரில் மூழ்கினார். தன் தந்தை ஆபத்தில் சிக்கியதைக் கண்டு பதறிப்போன ஐயனார், அவரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் உடனடியாகக் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக அவரும் அதே நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டு கிணற்றுக்குள் மயங்கிச் சரிந்தார்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்கும் 108 அவசர ஊர்தி சேவைக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், சிறப்பு சுவாசக் கருவிகள் மற்றும் பாதுகாப்பு முகமூடிகள் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி இருவரையும் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

“>

 

மருத்துவமனையில் அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து எலிபண்ட் கேட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இந்த விபத்துக்கான முழுமையான காரணங்கள் குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.