தமிழகத்தில் அரசு கேபிள் டிவி சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு, மாநில அரசுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

தனியார் மென்பொருள் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை அரசு முறையாக வழங்காத காரணத்தினால், கடந்த ஒரு வார காலமாக சர்வர் முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக செட்டாப் பாக்ஸ்களை ரீசார்ஜ் செய்ய முடியாமலும், புதிய இணைப்புகளைப் பெற இயலாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஏழை, எளிய மக்கள் குறைவான கட்டணத்தில் கேபிள் சேவைகளைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இந்த அரசு நிறுவனத்தை, தற்போதைய நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். அரசு நிறுவனத்தைச் சீரழிப்பதன் மூலம், பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பிற தனியார் நிறுவனங்களுக்கு அரசு மறைமுகமாக ஆதரவளித்து வருகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

“>

 

எனவே, முதல்வர் உடனடியாக இப்பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு, உரிய நிலுவைத் தொகையைச் செலுத்தி அரசு கேபிள் சேவையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்றும்; இதன் மூலம் 12 லட்சம் சந்தாதாரர்களின் நலனையும், கேபிள் ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.