ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு கொண்டு வந்துள்ள புதிய திருமணச் சட்டம், பெண்களுக்கு எதிரான மிகக் கொடூரமான மனித உரிமை மீறலாக உலகெங்கும் பெரும் அதிர்வலைகளையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. தலிபான்களின் உயரிய தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா ஒப்புதல் அளித்துள்ள ‘தம்பதியருக்கு இடையேயான பிரிவினைக்கான கோட்பாடுகள்’ என்ற இந்த 31 விதிகள் கொண்ட குடும்பச் சட்டத்தின்படி, பருவமடைந்த ஒரு ‘கன்னிப் பெண்’ திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தால், அதுவே அவரது சம்மதமாகக் கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த விதி சிறுவர்களுக்கோ அல்லது ஏற்கனவே திருமணமான பெண்களுக்கோ பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தன்னிச்சையான சட்டம், பெண்களின் அடிப்படை சுதந்திரத்தைப் பறிப்பதோடு அவர்களின் குரலை முற்றிலும் ஒடுக்கும் ஒரு அபாயகரமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்த புதிய சட்டம் ஆப்கானிஸ்தானில் குழந்தை திருமணங்களை முறைப்படுத்துவதோடு, தந்தையருக்கும் பாட்டன்மார்களுக்கும் தங்களின் மைனர் பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து வைப்பதற்கான முழு அதிகாரத்தையும் வழங்குகிறது.
ஏற்கனவே அங்கு நிலவும் கடும் வறுமை காரணமாகப் பல குடும்பங்கள் பெண் குழந்தைகளைப் பணத்திற்காகத் திருமணம் செய்து வைக்கும் கட்டாயத்தில் உள்ள நிலையில், இந்தச் சட்டம் அத்தகைய நடைமுறைகளை சட்டப்பூர்வமாக்குகிறது. பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும், பொது இடங்களுக்கு வரவும் ஏற்கனவே கடுமையான தடைகளை விதித்துள்ளது.
