அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமுகமாக நடந்ததாகக் கூறப்பட்டாலும், சீனா எந்த நேரத்திலும் தைவான் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று டிரம்பின் ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர்.

இச்சந்திப்பின் போது ஷி ஜின்பிங், சீனா ஒரு வளர்ந்து வரும் சக்தி அல்ல, மாறாக அமெரிக்காவிற்கு இணையான ஒரு வல்லரசு என்றும், தைவான் தங்களுடையது என்றும் மிக உறுதியான புவிசார் அரசியல் செய்தியை வெளிப்படுத்தியதாக ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் தைவான் ஒரு பெரிய மோதல் மையமாக மாறக்கூடும் என்றும், தைவான் விவகாரத்தை அமெரிக்கா சரியாகக் கையாளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதல் வெடிக்கும் என ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் சாத்தியமான மோதல் உலகளாவிய செமிகண்டக்டர் தொழில்துறையையும் அமெரிக்கப் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்று டிரம்பின் ஆலோசகர்கள் பெரிதும் கவலைப்படுகின்றனர்.

தற்போதைய சூழலில், செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட்போன்கள் மற்றும் வாகன உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் செமிகண்டக்டர் சிப்களுக்கு உலகம் முழுவதும் தைவானையே பெரிதும் நம்பியிருக்கிறது. இந்த விநியோகச் சங்கிலி முறிந்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ள அமெரிக்கா இன்னும் தயாராகவில்லை என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தைவானுக்காகத் திட்டமிடப்பட்ட 14 பில்லியன் டாலர் ஆயுதப் பொதிக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து டிரம்ப் இன்னும் இறுதி முடிவு எடுக்காத நிலையில், தாங்கள் ஒரு இறையாண்மை கொண்ட சுதந்திர நாடு என்றும், சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்றும் தைவான் வெளியுறவு அமைச்சகம் மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.