ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்க கடற்படை விதித்துள்ள முற்றுகையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஈரானின் எக்ஸ்பீடியன்சி கவுன்சில் உறுப்பினரும், ஐஆர்ஜிசியின் முன்னாள் தளபதியுமான மொஹ்சென் ரெசாய் எச்சரிக்கையில், அமெரிக்கா இந்த முற்றுகையை விரைவாக நீக்கவில்லை என்றால், ஓமன் கடல் பகுதி அமெரிக்க ராணுவத்தின் கல்லறையாக மாறும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஒரு போர்ப் பிரகடனமாக கருதும் ஈரான், தங்களின் பாதுகாப்பிற்காக எந்தவொரு போரையும் எதிர்கொள்ள ராணுவம் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. மேலும், இந்த முற்றுகை நீடிக்கும் பட்சத்தில் உலக நாடுகளுக்கு பெரும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ராஜதந்திர முயற்சிகளும் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுமே பேச்சுவார்த்தைக்கு தலா 5 கடுமையான நிபந்தனைகளை முன்னிறுத்தியுள்ளன. அமெரிக்க தரப்பில், ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் மற்றும் அணுசக்தி திட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மறுபுறம் ஈரான், தங்கள் மீதான தடைகளை நீக்க வேண்டும், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டும் மற்றும் போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு மிகக் குறைந்த கால அவகாசமே இருப்பதாகக் கூறி எச்சரித்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.