பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்குப் பின்னால் அமெரிக்காவின் சதி இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், தற்போது கசிந்துள்ள ஒரு ரகசிய தூதரக ஆவணம் (Cypher) மூலம் மீண்டும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் 2022-ல் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சற்று முன்பாக, பாகிஸ்தானுக்கான அப்போதைய அமெரிக்க தூதர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி டொனால்ட் லூ ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடல்கள் பதிவாகியுள்ளன.

இம்ரான் கானின் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு ஆதரவான சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையால் அமெரிக்கா அதிருப்தி அடைந்திருந்ததாகவும், அவர் பதவியிலிருந்து விலகினால் மட்டுமே இரு நாடுகளின் உறவு மேம்படும் என்றும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் பின்வாங்கிய பிறகு, பாகிஸ்தானில் ராணுவத் தளங்களை அமைக்க இம்ரான் கான் அனுமதி மறுத்ததும், உக்ரைன் போரின் போது ரஷ்யா சென்றதும் அமெரிக்காவின் கோபத்தை அதிகரித்ததாக இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

மேலும், இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸைச் சந்திக்க மறுத்த நிலையில், தற்போதைய பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் அமெரிக்காவுக்கு மிகவும் நெருக்கமானவராகச் செயல்பட்டு வருகிறார். பாகிஸ்தான் ராணுவம் இம்ரான் கான் பதவி நீக்கத்திற்கு முன்பிருந்தே சிஐஏ தரகர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், தற்போது சீனாவுடனான சில திட்டங்களின் வேகம் குறைக்கப்பட்டு, அமெரிக்காவுடனான உறவு பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் இந்த கசிந்த ஆவணம் அதிர்ச்சியூட்டும் உண்மைகளைப் அம்பலப்படுத்தியுள்ளது.