மத்தியப் பிரதேசம் இந்தூர் நகரில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில், 14 வயது சிறுவன் ஒருவன் மூதாட்டிகளைத் தடிகொண்டு கண்மூடித்தனமாகத் தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பராமரிப்பு இல்லத்தின் இயக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தூர் மரிமாதா பகுதியில் உள்ள ‘மகாராணா பிரதாப் நல சங்கம்’ சார்பில் நடத்தப்படும் மூதியோர் இல்லத்தில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. சிறுவனுக்கும் மூதாட்டிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தராக்கு முற்றிய நிலையில், அந்தச் சிறுவன் கையில் கிடைத்த தடியால் மூதாட்டியைத் தாக்கியதுடன், தடுக்க வந்தவர்களையும் எதிர்த்துச் சண்டையிட்டுள்ளான். இந்தக் கொடூரக் காட்சியின் வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து அதிகாரிகள் களத்தில் இறங்கினா்.

காவல்துறையினர் மற்றும் உதவி ஆணையர் ரூபினா மிழ்வானி மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்த முக்கியத் தகவல்கள் கடுமையான தீக்காயங்கள் காரணமாகச் சிறுவனின் தாய் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இதே இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பலனின்றித் தாய் உயிரிழந்த போதிலும், சிறுவன் அங்கேயே தொடர்ந்து தங்கியிருந்துள்ளான். அவனது மனநிலை சற்று சரியில்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பொதுமக்களின் நன்கொடைகளைக் கொண்டு இயங்கி வரும் இந்த இல்லத்தில் சுமார் 30 முதியவர்கள் வசித்து வருகின்றனர். ஆனால், சமூக நீதித்துறையின் முறையான கட்டாய அனுமதி எதையும் பெறாமலேயே இந்த இல்லம் சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுவனின் வயது மற்றும் மனநநிலையைக் கருத்தில்கொண்டு அவன் மீது காவல் நிலையத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. எனினும், காப்பகத்தின் இயக்குநர் நீலம் துபேவை நேரில் அழைத்துத் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“>

 

மேலும், அந்தச் சிறுவனை முதியவர்களிடமிருந்து தனிமைப்படுத்தவும், அவனுக்கு முறையான மனநலக் கவுன்சிலிங் வழங்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சிறுவனின் சீர்திருத்தம் மற்றும் மேற்பார்வைக்காக அவன் ‘சைல்ட்லைன்’ மூலமாகச் சிறார்களின் காப்பகத்திற்கு மாற்றப்பட உள்ளான். இதனிடையே, உரிய அனுமதியின்றி இயங்கி வந்த அந்த முதியோர் இல்லத்தின் மீதான சட்டமீறல் புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.