பெங்களூருவின் புகழ்பெற்ற இந்திரா நகர் பகுதியில் நிலவும் மோசமான உள்கட்டமைப்பு குறித்து கனடாவைச் சேர்ந்த காலேப் ஃப்ரீசென் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தனது மகனுடன் நடைபாதையில் நடந்து செல்லும் அவர், அங்குள்ள நடைபாதைகள் உடைந்தும், வடிகால் மூடிகளில் விரிசல் ஏற்பட்டும் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளால் மக்கள் சாலையில் இறங்கி நடக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும், அப்படிச் செல்லும்போது வேகமாக வரும் வாகனங்களால் பாதுகாப்பு அச்சம் ஏற்படுவதாகவும் அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார். குறிப்பாகக் குழந்தைகளுடன் நடப்பது இங்கு மிகவும் ஆபத்தானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
“>
இந்தச் சூழலிலும் இந்தியாவின் மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது, இந்திரா நகரில் குறைந்தபட்சம் நடைபாதை வசதியாவது இருப்பதை அவர் பாராட்டியுள்ளார். வரும் காலங்களில் இந்த நிலைமை மாறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், பெங்களூரு போன்ற ஒரு வளர்ச்சியடைந்த நகரத்தில் அடிப்படை வசதிகள் இப்படி இருப்பது வருத்தமளிப்பதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடைபாதைகளின் மோசமான நிலையால் பாதசாரிகள் படும் அவதி குறித்தும், நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு குறித்தும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.
