மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில், தூக்கத்தில் துணியில் மலம் கழித்ததற்காக 3 வயது சிறுவனை அவனது தாயின் கள்ளக்காதலன் கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயபுரத்தைச் சேர்ந்த ஷாநாஸ் ஷேக் (28) என்பவர், தனது கணவரைப் பிரிந்து மௌலாலி (எ) அக்பர் ரசாக் (44) என்பவருடன் கடந்த ஒரு மாதமாக சோலாப்பூரில் வசித்து வந்தார்.

கடந்த டிசம்பர் 11-ம் தேதி இரவு, மதுபோதையில் இருந்த மௌலாலிக்கு அருகில் ஷாநாஸின் 3 வயது மகன் ஃபர்ஹான் தூங்கிக்கொண்டிருந்தான்.

அப்போது அந்தச் சிறுவன் தூக்கத்திலேயே தனது துணியில் மலம் கழித்ததால் ஆத்திரமடைந்த மௌலாலி, குழந்தையைச் சரமாரியாகத் தாக்கியதோடு, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளான். வேலை முடிந்து வந்த ஷாநாஸிடம் குழந்தை கீழே விழுந்துவிட்டதாகக் கூறி மௌலாலி நாடகமாடியுள்ளார்.

முதலில் தனியார் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் காவல்துறையிடம் சிக்கிவிடுவோம் என்று அஞ்சிய மௌலாலி, ஷாநாஸையும் குழந்தையையும் கர்நாடக மாநிலம் விஜயபுரத்திற்கு அழைத்துச் சென்று பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்டுத் தப்பியோடினார்.

இதையடுத்து தனது முதல் கணவரின் உதவியுடன் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனையில் சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்டே உயிரிழந்தான் என்பது உறுதியானது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சோலாப்பூர் போலீசார், தலைமறைவாக இருந்த மௌலாலியைத் தேடிப் பிடித்துக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.