பிரபல நடிகர் சூர்யாவின் தனி உதவியாளரிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்ததாக சூர்யா வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மோசடி புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, சென்னை மாம்பலம் போலீசார் வழக்குப் பதிந்து, சந்தேக நபர்களை தேடி வந்தனர். விசாரணையின் போது, அந்த பணிப்பெண் சுலோச்சனா, அவரது மகன்கள் பாலாஜி, பாஸ்கர் மற்றும் சகோதரி விஜயலட்சுமி ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
மாம்பலம் போலீசார் தெரிவித்ததாவது, குறைந்த விலையில் நகைகள் வாங்கித் தருவதாக பலரை நம்பவைத்து, ஏராளமானவர்களிடம் இருந்து ரூ.2.5 கோடி வரை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் நடிகர் சூர்யாவின் உதவியாளரிடம் மட்டும் ரூ.42 லட்சம் மோசடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட நால்வரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
