தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக பெரும் இழுபறி நீடித்து வருகிறது. “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை திமுக திட்டவட்டமாக நிராகரித்து வரும் சூழலில், அமைச்சர் ராஜகண்ணப்பன் போன்றவர்களின் விமர்சனங்கள் இரு கட்சிகளிடையே கசப்பை உண்டாக்கியுள்ளன.
இதுவரை தொகுதிப் பங்கீட்டுக் குழுவை திமுக அமைக்காதது காங்கிரஸாரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் திமுக – காங்கிரஸ் இடையிலான பல ஆண்டுகால நட்பு விரிசலடையும் நிலையில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
மறுபுறம், முதன்முறையாக தேர்தலைச் சந்திக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தங்கள் கூட்டணியில் இணைந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என வெளிப்படையாக அறிவித்துள்ளது. தவெக-வின் இந்த அழைப்பு, தற்போது திமுகவிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் காங்கிரஸிற்கு ஒரு மாற்று வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
டெல்லி மேலிடம் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இதுகுறித்துத் தீவிரமாக ஆலோசனை நடத்தி வரும் நிலையில், தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாவிட்டால் காங்கிரஸ் தவெக-வுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வி தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
