மதுரை மாநகர் வடக்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் விஜயன்பன் கல்லணை மீது, சத்யா என்ற பெண் தொண்டர் சமீபத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்நிலையில், இது திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு என்று கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திடீரென குவிந்தனர்.

எதிர்பாராத இந்த கூட்டத்தால் பரபரப்பு ஏற்படவே, 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தினர். பின்னர், முக்கிய பெண் நிர்வாகிகள் மட்டும் சென்று, அவதூறு பரப்பும் சத்யா மற்றும் அவருக்குப் பின்னால் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்தனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த பெண் நிர்வாகிகள், “சத்யா என்பவர் மீது ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. கிரிமினல் பின்னணி உள்ளவர்களுக்குப் பதவி வழங்கப்படாது என்ற கட்சித் தலைமையின் முடிவால் அவருக்குப் பதவி கிடைக்கவில்லை. அந்த ஆத்திரத்தில், வேறொருவரின் தூண்டுதலின் பேரில் மாவட்ட செயலாளர் மீது அவர் பொய்ப்புகார் அளிக்கிறார்.

விஜயன்பன் கல்லணை பெண்களிடம் மிகவும் கண்ணியமாக நடக்கக்கூடியவர்; இரவு முழுவதும் அலுவலகப் பணி இருந்தாலும் கூட, பெண் தொண்டர்களைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கும் குணம் கொண்டவர்,” என்று ஆவேசமாகத் தெரிவித்தனர். மதுரை த.வெ.க. உட்கட்சிக்குள் எழுந்துள்ள இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.