கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள வரட்டனப்பள்ளியில் நடைபெற்ற பாஜக சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாகக் கடுமையாகச் சாடினார். குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையைக் குறைப்பதாகக் கூறிவிட்டு, இப்போது அதைச் செய்யாமல் மௌனம் காப்பதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் குறித்து திமுகவினர் திட்டமிட்டுப் பொய்களைப் பரப்பி வருவதாக அவர் தெரிவித்தார். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள பயோமெட்ரிக் (கைரேகை) முறையினால், இனி ஒரு பைசா கூட முறைகேடு செய்ய முடியாது என்பதால் திமுகவினர் இந்தப் புதிய முறையை எதிர்க்கின்றனர்.

பிரதமர் மோடி இத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியுள்ள நிலையில், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதால் திமுகவினர் கலக்கத்தில் இருப்பதாகவும் கூறினார். மேலும் தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும், காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கூறிய அவர், இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனத் தனது பேச்சில் ஆவேசமாகத் தெரிவித்தார்.