தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 23 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகப் பரவி வரும் தகவல் குறித்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொகுதி பங்கீடு குறித்த முடிவுகளை எடுக்கும் இடத்தில் தான் இல்லை என்றும், இது குறித்து அந்தந்த கட்சித் தலைவர்கள் தான் பேசி முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்தார். தற்போது தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் பியூஷ் கோயல் சரியான நேரத்தில் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என அவர் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, திமுகவை வீழ்த்துவதே கூட்டணியின் ஒற்றை இலக்கு என்று தெரிவித்தார். தேமுதிக, அமமுக மற்றும் ஓபிஎஸ் தரப்பு என அனைத்து தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதால், பொறுமையாக இருந்து இறுதி முடிவை எதிர்நோக்க வேண்டும் என்றார். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் மரியாதையாக நடத்தப்பட்டு, தேர்தலை எதிர்கொண்டு பெரும் வெற்றியைப் பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
