தமிழக அரசியல் களத்தில் வாரிசு அரசியல் குறித்த விவாதங்கள் எப்போதுமே எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படுவது வழக்கம். ஆனால், தற்போது ஆளுங்கட்சியான திமுகவைச் சேர்ந்த ஒரு கவுன்சிலரே, அக்கட்சியின் முக்கிய தலைவரான உதயநிதி ஸ்டாலினின் தகுதி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வறுத்தெடுத்துள்ளது ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் அதிர வைத்துள்ளது.

​நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாநகராட்சியின் 22 வது வார்டு திமுக கவுன்சிலர், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சரம் மாரியாகத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, “உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது? மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறது, அதை நான் இல்லை என்று சொல்லவில்லை. கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது ஸ்டாலினை முதலமைச்சராக அறிவித்ததற்கு ஒரு தகுதி இருந்தது. ஏனென்றால் அவர் மிசா சட்டத்தில் உள்ளே சென்று சிறைவாசம் அனுபவித்தவர், கட்சிக்காக அதிகம் செயல்பட்டிருக்கிறார்” என்று ஸ்டாலினுக்கு ஆதரவாகப் பேசினார்.

​தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை கடுமையாகத் தாக்கிப் பேசிய அவர், “ஆனால் உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது? ஏதோ சினிமாவில் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தவரை திடீரென கட்சிக்குள் கொண்டு வந்து இளைஞர் அணி செயலாளராகப் பதவி கொடுத்தார்கள். பின்னர் எம்எல்ஏவாக நிற்க வைத்து ஜெயித்ததும் மினிஸ்டர் ஆக்கினார்கள். அடுத்த எலக்ஷனில் தோற்றார், உடனே அவரைத் துணை முதலமைச்சர் ஆக்கினார்கள். இப்போது எலக்ஷனில் தோற்றுவிட்டு எதிர்க்கட்சி தலைவராக உட்கார்ந்து இருக்கிறார்.

அவரும் அங்கே என்ன செய்கிறார்? யாரோ எழுதி கொடுத்ததை தான் படிக்கிறார்” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் உதயநிதி ஸ்டாலினை வறுத்து எடுத்துள்ளார். ​சொந்தக் கட்சியைச் சேர்ந்த ஒரு கவுன்சிலரே, கட்சியின் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, “யாரோ எழுதிக் கொடுத்ததைத்தான் படிக்கிறார்” என்று செய்தியாளர்கள் முன்னிலையிலேயே பகிரங்கமாகக் கிழித்துத் தொங்கவிட்டிருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், அந்த கவுன்சிலர் மீது கட்சித் தலைமை என்ன மாதிரியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எகிறியுள்ளது.