நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) உட்கட்சி விவகாரம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சர் ஆனந்த் மீது வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக நீதிமன்றத்தில் புகார் அளித்த தவெக பெண் பிரமுகர் ஞானசௌந்தரி, இன்று காலை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

முன்னதாக, ஞானசௌந்தரி கட்சியின் பெயருக்கும் புகழுக்கும் கலங்கம் விளைவிக்கும் வகையிலும், தேவையற்ற முறையிலும் கட்சி மீது அவதூறு பரப்புவதாகவும் தவெக-வின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாகவே அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அதிரடி நீக்கத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த ஞானசௌந்தரி கடும் எதிர்ப்பையும், பரபரப்பு வாக்குமூலத்தையும் அளித்துள்ளார். “என்னைத் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து நீக்குவதற்கு விழுப்புரம் மாவட்ட செயலாளருக்கு எந்தவிதமான சட்டப்பூர்வ அதிகாரமும் கிடையாது; இந்த நீக்க நடவடிக்கை முற்றிலும் சட்ட விரோதமானது” என்று அவர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “நம்முடைய கட்சியின் தலைவர் விஜய், தமிழகத்தில் ஊழலற்ற கொள்கை மற்றும் நேர்மையான நிர்வாகம் அமைய வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய அந்தத் தூய்மையான கொள்கையின் அடிப்படையில் தான், நான் அமைச்சர் மீதான ஊழல் புகாரை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினேன்” என்று தனது செயலுக்கு விளக்கம் அளித்துள்ளார். தன்னை நீக்க மாவட்ட செயலாளருக்கு அதிகாரம் இல்லை என நீக்கப்பட்ட பெண் நிர்வாகி தற்பொழுது பகிரங்கமாகப் பேட்டி அளித்துள்ளது தவெக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.