திராவிட மாடல் என்று கூறி ஆட்சி நடத்திய திமுக-வைப் போலவே, தற்போதைய த.வெ.க. அரசும் விலைமதிப்பற்ற மனித உயிர்களுக்கு விலை வைக்கும் ஒரு ‘துஷ்ட சக்தி’ அரசாகச் செயல்பட்டு வருகிறது” என்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 5 ஆண்டு கால நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில் இருந்து மக்கள் ஒருவழியாக விடுபட்டாலும், தற்போதைய த.வெ.க. ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் ‘மழைவிட்டும் தூவானம் விடவில்லை’ என்ற பழமொழிக்கு ஏற்பவே அமைந்துள்ளது. யானையின் பிடியிலிருந்து தப்பி, முதலையின் வாய்க்குள் விழுந்தது போல அப்பாவி பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

கடந்த ஆட்சிக் காலத்தில் ‘கோவில் காவலாளி அஜித்குமார்’, சென்னை தலைமைச் செயலக காலனி போலீசாரால் ‘விக்னேஷ்’ மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் எனப் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்களும், என்கவுண்டர் என்ற பெயரில் நடத்தப்பட்ட மரணங்களும் அரங்கேறின. முக்கிய குற்றவாளிகளைக் காப்பாற்றவே அன்றைய அரசு அவ்வாறு செயல்பட்டது என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்தது.

தற்போது ‘மாற்றம் கொண்டு வருவோம்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசிலும் இத்தகைய அடாவடித்தனங்கள் தடையின்றித் தொடர்கின்றன. சமீபத்தில் நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவரைச் சிறைக் காவலர்கள் கொடுமைப்படுத்திச் சாகடித்ததாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்துக் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்த அரசின் அமைச்சர்கள் சிலர் நேரில் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விலைபேசி, சமாதானப்படுத்த முயன்று தோற்றுப்போயுள்ளனர். அரசின் நிவாரண நிதியையும், உதவியையும் பெற அக்குடும்பத்தினர் மறுத்துவிட்டதாகச் செய்திகள் வருகின்றன.

இதேபோல், சென்னை புழல் சிறையிலும் விசாரணைக்கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவர்தம் உறவினர்களும் நீதி கேட்டுப் போராடி வரும் வேளையில், அவர்களிடமும் இந்த ஆட்சியாளர்கள் விலைபேசி வருகிறார்கள்.

ஆட்சிக்கு வந்த 60 நாட்களுக்குள்ளேயே, “உயிரே உன் விலை என்ன?” என்று கேட்டுப் பணத்தை வாரி இறைத்து, அப்பாவிகளின் வாயை அடைத்துவிடலாம் என்ற மமதை எண்ணம் ஒரு முதலமைச்சருக்கு வந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தன்னைப் பார்க்க வந்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலை கொடுத்துவிட்டால், அந்தக் குடும்பங்கள் ஜென்ம சாபல்யம் அடைந்துவிடும் என்று ஆட்சியாளர்கள் மிதக்கிறார்கள். லாக்-அப் மரணங்கள் மற்றும் சிறைச்சாலை மரணங்களைத் தடுக்க எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல், ‘குதிரைகள் ஓடிய பின்னால் லாயத்தைப் பூட்டுவதற்குச் சமமாக’ அமைச்சர்களை விட்டுப் பேச வைப்பது வேடிக்கையானது.

“கோடிகளில் பணம் பெற்றோம், கொடுத்த கால்ஷீட்படி நடித்துக் கொடுத்தோம், படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை” என்று உச்சத்தைத் தொட்ட நடிகர் ஒருவர், உச்சாணிக் கொம்பில் அமர்ந்துகொண்டு கொக்கரிப்பது போல் ஆட்சி நடத்த முடியாது என்பதை த.வெ.க. முதலமைச்சர் அவர்கள் உணர வேண்டும்.

மாற்றத்தை வேண்டி வாக்களித்த மக்களுக்கு, நன்மைகளைத் தராவிட்டாலும் பரவாயில்லை; ஏமாற்றத்தைத் தராத வகையில் இந்த ‘பொய்க்கால் குதிரை’ அரசின் முதலமைச்சர் தனது ஆட்சிச் சக்கரத்தைச் சுழற்ற வேண்டும் என்று எடப்பாடி K. பழனிசாமி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.