இமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மணாலி பகுதியில் உள்ள மலைப் பிரதேசத்தில், பிரபல யூடியூபரான துருவ் என்பவர் தங்கி வந்துள்ளார். இவர் தனது வீட்டுத் தேவைக்காக சில அத்தியாவசியப் பொருட்களை, ‘பிளிங்கிட்’ என்ற ஆன்லைன் மளிகைப் பொருட்கள் விநியோகச் செயலி மூலமாக ஆர்டர் செய்துள்ளார். பனி படர்ந்த மலைப்பகுதி என்பதால் டெலிவரி செய்யப்படுமா என்ற கேள்விக்கு மத்தியில், அடுத்த 25 நிமிடங்களில் பொருட்கள் வந்து சேரும் என்ற குறுஞ்செய்தி அவருக்கு வந்துள்ளது.
அந்நிறுவனம் வாடிக்கையாளருக்கு உறுதியளித்தபடியே, மிகச் சரியான நேரத்திற்குப் பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்துள்ளது. ஆனால், அந்தப் பகுதி செங்குத்தான மலைப்பாதை என்பதால் விநியோக ஊழியரின் மோட்டார் சைக்கிள் மேலே ஏற முடியாத சூழல் நிலவியுள்ளது. இதை உணர்ந்துகொண்ட விநியோகஸ்தர், துருவ் தங்கியிருந்த மலைப் பகுதிக்குக் கீழே வந்து காத்திருந்துள்ளார்.
View this post on Instagram
தனது ஆர்டர் கீழே வந்துவிட்டதை அறிந்த யூடியூபர் துருவ், ஊழியரை மேலே வரச் சொல்லி சிரமப்படுத்த விரும்பவில்லை. இதனால் அவர் உடனடியாக மலையிலிருந்து கீழே இறங்கி, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று, விநியோக ஊழியரிடமிருந்து தான் ஆர்டர் செய்த பொருட்களைப் பெற்றுக்கொண்டார். இக்கட்டான சூழலிலும் ஊழியர் காட்டிய கடமை உணர்வை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
மலைப் பிரதேசத்தில் ஆன்லைன் டெலிவரி பெறப்பட்ட இந்தச் சுவாரசியமான அனுபவம் முழுவதையும் துருவ் வீடியோவாகப் பதிவு செய்து, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் மிக வேகமாகப் பரவி, நெட்டிசன்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இக்கட்டான மலைப் பாதையிலும் 25 நிமிடங்களில் டெலிவரி செய்த நிறுவனத்தின் வேகத்தையும், ஊழியரைச் சிரமப்படுத்தாமல் நடந்து சென்று வாங்கிய யூடியூபரின் பெருந்தன்மையையும் ரசிகர்கள் பலவாறாகப் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
