தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) சமீபகாலமாக மாவட்டச் செயலாளர்களுக்கும், தலைமைக்கும் இடையே புகைச்சல் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தக் கட்சி ரீதியான சிக்கல்களைச் சமாளிக்க, விஜய் ஒரு புதிய வியூகத்தைக் கையில் எடுத்துள்ளார். மாவட்டச் செயலாளர்களைக் (மா.செ) கண்காணிக்கவும், அவர்கள் மூலம் நடக்கும் பணிகளை முறைப்படுத்தவும் மாவட்டப் பொறுப்பாளர்களை (மா.பொ) நியமிக்கத் தலைமை முடிவு செய்துள்ளது.
இனி மாவட்டச் செயலாளர்கள் தங்கள் அன்றாடப் பணிகளை இந்தப் பொறுப்பாளர்களிடம் தெரிவித்துவிட்டுத்தான் முன்னெடுக்க வேண்டும் என்கிற புதிய கட்டுப்பாடு விஜய் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. வருவாய் மாவட்ட அடிப்படையில் நியமிக்கப்பட உள்ள இந்தப் பொறுப்பாளர்கள், கட்சியின் அடிமட்ட வேலைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை போன்றவற்றைத் தலைமையிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்வார்கள்.
மா.செ-க்கள் தனித்து முடிவெடுப்பதைக் குறைக்கவும், கட்சியில் கோஷ்டி பூசல் உருவாவதைத் தடுக்கவும் இந்த “வாட்ச்மேன்” ஸ்டைல் கண்காணிப்பு முறை கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் இந்த அதிரடி மூவ், சில மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும், கட்சியை ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டு வர இது அவசியம் எனத் தலைமை தரப்பில் சொல்லப்படுகிறது.
