கடலூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்தின் டயார் வெடித்து ஏற்பட்ட கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விபத்து தொடர்பாகப் பேருந்தின் ஓட்டுநர் தாஹா அலியைப் போலீசார் கைது செய்திருப்பது இப்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அரசுப் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததே இந்த விபத்துக்குக் காரணம் என்று குற்றம் சாட்டும் எதிர்க்கட்சியினரான அதிமுக மற்றும் பாஜகவினர், ஓட்டுநரை மட்டும் எப்படிக் கைது செய்யலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
நிர்வாகத்தின் தவறுகளை மறைக்க ஓட்டுநரைப் பலிகடா ஆக்குவது நியாயமல்ல என்றும், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் சம்பந்தப்பட்ட மேலாளர் மீதுதான் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அரசுப் பேருந்துகளின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்துப் பொதுமக்களிடையே ஏற்கனவே அதிருப்தி நிலவி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் இந்தப் போராட்டம் இந்த விவகாரத்தைச் சூடாக்கியுள்ளது.
