தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள 17-வது சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையைத் தயார் செய்ய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு புதிய குழுவை அமைத்துள்ளார். இந்தக் குழுவில் நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார் மற்றும் வைகைச்செல்வன் ஆகிய 10 முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

மக்களுக்குப் பயன் தரும் வகையில் சிறந்த தேர்தல் அறிக்கையை உருவாக்குவதே இக்குழுவின் முக்கிய நோக்கமாகும். இந்தக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிய உள்ளனர்.

மக்கள் அளிக்கும் ஆலோசனைகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை இறுதி செய்யப்படும். இதற்கான விரிவான சுற்றுப்பயணத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.