திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின்  நிர்வாகி சத்திய நாராயணன், உட்கட்சி மோதல் மற்றும் மிரட்டல் காரணமாகத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுச் சத்திய நாராயணன் அப்பகுதியில் வாழ்த்து பேனர்களை வைத்திருந்தார். அந்தப் பேனரில் கட்சியின் பூண்டி ஒன்றிய செயலாளர் விஜய் பிரபுவின் புகைப்படம் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் பிரபு, சத்திய நாராயணனைத் தொடர்பு கொண்டு, “தனது புகைப்படம் இல்லாமல் எப்படி பேனர் வைக்கலாம்?” எனக் கேட்டு ஆபாசமாகப் பேசியதுடன், அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சத்திய நாராயணன், நேற்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்ட உறவினர்கள், உடனடியாகத் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி அஜிதா அக்னல் தற்கொலைக்கு முயன்ற சோகம் மறைவதற்குள், திருவள்ளூரிலும் அதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்துத் திருவள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் விஜய் பிரபுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.