சென்னை காசிமேடு கடற்கரையில் அரிய வகை நச்சு உயிரினமான ‘புளூ டிராகன்’ (Blue Dragon) கரை ஒதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பதற்கு நீல நிறத்தில் அழகாகத் தென்படும் இந்த கடல் நத்தைகள், விஷத்தன்மை கொண்ட உயிரினங்களை உணவாக உட்கொண்டு, அவற்றின் விஷத்தை தங்கள் உடலில் சேமித்து வைக்கும் தன்மை கொண்டவை. இதனால் இவை மனிதர்களைத் தீண்டினால் கடுமையான எரிச்சல், தாங்க முடியாத வலி, வீக்கம், குமட்டல் மற்றும் தீவிர ஒவ்வாமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஸ்பெயினில் இதேபோன்ற புளூ டிராகன்கள் அதிகளவில் தென்பட்டபோது, பாதுகாப்பு கருதி கடற்கரைகள் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், தற்போது காசிமேட்டில் இவற்றை ஆர்வமுடன் பார்க்க திரளும் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் இந்த உயிரினத்தைத் தொடவோ அல்லது அதன் அருகே செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
