மருமகளிடம் பராமரிப்புத் தொகை கோரி மாமனார் மற்றும் மாமியார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம், “நெறிமுறை சார்ந்த கடமைகளை சட்டப்பூர்வக் கடமையாக மாற்ற முடியாது” என்று மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
உத்தரப் பிரதேச காவல் துறையில் காவலராகப் பணியாற்றிய நபர் ஒருவர் கடந்த 2021-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது மனைவியும் (மருமகள்) அதே காவல் துறையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், உயிரிழந்த காவலரின் முதியோர்களான பெற்றோர், தங்களுக்குப் பராமரிப்புத் தொகை வழங்க மருமகளுக்கு உத்தரவிடக் கோரி குடும்ப நீதிமன்றத்தை அணுகினர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குடும்ப நீதிமன்றம் இவர்களது கோரிக்கையை நிராகரித்தது. இதனை எதிர்த்து அந்த முதிய தம்பதியினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
முதிய தம்பதியினர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதங்கள் மனுதாரர்கள் இருவரும் படிப்பறிவில்லாத முதியவர்கள்; தங்கள் மகனை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருந்தனர். மருமகள் போதிய வருமானம் ஈட்டும் அரசு வேலையில் உள்ளார்.
மகனின் மறைவுக்குப் பிறகு அவருக்குக் கிடைக்க வேண்டிய பணப்பலன்களையும் அவரே பெற்றுள்ளார். தனது கணவரின் முதிய பெற்றோரைப் பராமரிக்க வேண்டிய ‘நெறிமுறை சார்ந்த கடமை’ மருமகளுக்கு உள்ளது. இதனைச் சட்டப்பூர்வக் கடமையாகக் கருத வேண்டும் என்றார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதன் பால் சிங், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டப்பிரிவு 144-இன் கீழ் இந்த வழக்கை ஆய்வு செய்தார். நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டதாவது, சட்டப்பிரிவு 144-இன் படி, ஒரு நபர் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோரை மட்டுமே பராமரிக்கச் சட்டப்படி கடமைப்பட்டவர். இதில் ‘மாமனார் மற்றும் மாமியார்’ சேர்க்கப்படவில்லை.
ஒரு மருமகள் தனது மாமனார் மற்றும் மாமியாரைப் பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்பை இந்தச் சட்டப்பிரிவின் கீழ் கொண்டு வருவது சட்டமியற்றுபவர்களின் நோக்கம் அல்ல. நெறிமுறை அல்லது மனிதாபிமான அடிப்படையில் ஒரு விஷயம் சரியாகத் தோன்றினாலும், சட்டத்தில் அதற்கு இடமில்லாதபோது அதைச் சட்டப்பூர்வக் கடமையாக அமல்படுத்த முடியாது.
மேலும் மருமகளுக்குக் கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. “சட்ட ரீதியான கட்டாயம் இல்லாத பட்சத்தில், மனிதாபிமானக் காரணங்களுக்காக நீதிமன்றம் உத்தரவிட முடியாது” எனக் கூறி முதிய தம்பதியின் மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றமா உத்தரவிட்டது.
