ஒருவரை முதன்முதலில் சந்திக்கும்போது, சில வினாடிகளிலேயே அவர் நம்பிக்கையானவரா? திறமையானவரா? என்று நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். இது தற்செயலானது அல்ல; இதற்குப் பின்னால் மூளையின் மிகச் சிக்கலான அறிவியல் செயல்பாடுகள் ஒளிந்துள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாம் ஒருவரைப் பார்த்த சில மில்லி விநாடிகளிலேயே, நமது மூளையிலுள்ள ‘அமிக்டலா’ (Amygdala) என்ற பகுதி செயல்படத் தொடங்குகிறது. இது பயம் மற்றும் உணர்ச்சிகளைக் கையாளும் பகுதியாகும். எதிரே இருப்பவர் பாதுகாப்பானவரா அல்லது ஆபத்தானவரா என்பதை இந்த பகுதி உடனடியாகத் தீர்மானிக்கிறது.
இதற்குப் பிறகு, மூளை ‘தின் ஸ்லைசிங்’ (Thin Slicing) எனப்படும் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. அதாவது, ஒருவரது உடை, உடல்மொழி, குரல் தொனி மற்றும் முகபாவனைகளை வைத்து அவர்களைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை தானாகவே உருவாக்கிவிடுகிறது.
முதல் அபிப்ராயங்கள் எப்போதும் சரியாக இருப்பதில்லை. இதில் இரண்டு முக்கிய ‘மனச்சாய்வுகள்’ விளையாடுகின்றன. அதன்படி ஹாலோ எஃபெக்ட் (Halo Effect): ஒருவர் நன்றாக உடை அணிந்திருந்தாலோ அல்லது நம்பிக்கையுடன் பேசினாலோ, அவருக்கு மற்ற எல்லா நற்பண்புகளும் இருக்கும் என்று மூளை தவறாகக் கணக்கிடும்.
உறுதிப்படுத்தல் சார்பு (Confirmation Bias): ஒருவரைப் பற்றி முதலில் நாம் என்ன நினைக்கிறோமோ, அதை உறுதிப்படுத்தும் தகவல்களை மட்டுமே மூளை ஏற்கும். அதற்கு எதிரான உண்மைகளை மூளை புறக்கணித்துவிடும்.
நமது தோற்றம் மற்றும் செயல்பாடுகள் மற்றவர்கள் மனதில் எப்படிப் பதிகின்றன என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக தூய்மையான உடையும், நேர்த்தியான தோற்றமும் ஒருவரைத் தொழில்முறை நிபுணராகக் காட்டும்.
நேரான நிமிர்ந்த நிலை, நேருக்கு நேர் பார்த்துப் பேசுதல் (Eye Contact) ஆகியவை தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும். தெளிவான மற்றும் சீரான குரல் ஒருவரது ஆளுமையை வலுப்படுத்தும். தொடர்ச்சியான மற்றும் நிலையான நன்னடத்தை மூலம் ஒருவரது தவறான எண்ணத்தை மாற்ற முடியும். ஆனால், ஒருமுறை ஏற்பட்ட மோசமான அபிப்ராயத்தை மாற்றுவதற்கு, நல்ல அபிப்ராயத்தை உருவாக்குவதை விட அதிக உழைப்பு தேவைப்படும். உண்மைத்தன்மையும், நேர்மறையான செயல்பாடுகளுமே இதற்குச் சிறந்த மருந்தாகும்
மேலும் முதல் அபிப்ராயங்கள் கதவுகளைத் திறக்கலாம்; ஆனால் உங்கள் தொடர்ச்சியான செயல்களே நீங்கள் யார் என்பதை உலகுக்கு நிரூபிக்கும். மற்றவர்களை எடைபோடும்போது நம்மிடம் இருக்கும் மனச்சாய்வுகளைத் தவிர்த்தால், சரியான உறவுகளைப் பேண முடியும்.
