சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் சூழலில், காய்ந்த இலைகளைக் கொண்டு சமையல் எரிவாயு தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை ஐஐடி பாம்பே (IIT Bombay) வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.
ஐஐடி பாம்பே வளாகத்தில் உள்ள மரங்களிலிருந்து விழும் காய்ந்த இலைகளை அப்புறப்படுத்துவது பெரிய சவாலாக இருந்தது. இதற்குத் தீர்வுகாணும் வகையில், கடந்த 2014-ஆம் ஆண்டு வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் சஞ்சய் மகாஜனி தலைமையில் ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. சுமார் 10 ஆண்டுகால தீவிர உழைப்பிற்குப் பிறகு, ‘பயோமாஸ் காசிஃபிகேஷன்’ (Biomass Gasification) எனப்படும் இலைகளை எரிவாயுவாக மாற்றும் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஆரம்பக்கட்டத்தில் அதிகப்படியான புகை மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. குறிப்பாக, எரிவாயு கலனில் உருவாகும் திடக் கழிவுகள் (பெரிய தடையாக இருந்தன. எனினும், விடாமுயற்சியுடன் செயல்பட்ட குழுவினர், 2016-ல் மேம்படுத்தப்பட்ட இயந்திரத்தை உருவாக்கினர். பின்னர் 2017-ல் எரிசக்தி அறிவியல் துறை பேராசிரியர் சந்தீப் குமார் இக்குழுவில் இணைந்து, அதிக வெப்பத்திறன் கொண்ட நவீன அடுப்புகளை (Burners) வடிவமைத்தார்.
பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, 2024-ஆம் ஆண்டு முதல் ஐஐடி பணியாளர் உணவகத்தில் இத்தொழில்நுட்பம் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் சிறப்பம் சாதாரண சிலிண்டர் பயன்பாட்டை விட 30% முதல் 40% வரை எரிவாயு சேமிக்கப்படுகிறது.
இந்த அடுப்புகள் 60% அதிக வெப்பத்திறனுடன் செயல்படுகின்றன. ஆண்டுக்கு சுமார் 8 டன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றம் இதன் மூலம் குறைக்கப்படுகிறது.
தற்போது பணியாளர் உணவகத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் இந்த முறையை, விரைவில் மாணவர் விடுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 50 லட்சம் வரை எரிபொருள் செலவை மிச்சப்படுத்த முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இலைகள் மட்டுமின்றி, மறுசுழற்சி செய்ய முடியாத இதர உலர் கழிவுகளையும் இதில் பயன்படுத்த முடியும். இது தவிர, ஐஐடி வளாகத்தில் தினமும் 2 டன் ஈரமான உணவுக் கழிவுகளை எரிசக்தியாக மாற்றும் ‘பயோ-மெத்தனேஷன்’ (Biomethanation) ஆலை ஒன்றும் 2019 முதல் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த நவீன கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் தொழிற்சாலைகள் மற்றும் பெரிய உணவகங்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமையும் என பேராசிரியர் சந்தீப் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
