இந்தியாவில் உள்ளவர்களில் 10 பேரில் 9 பேருக்கு ரத்தத்தில் கொழுப்புச் சீர்கேடு  இருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தனது புதிய ஆய்வில் தெரிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒட்டுமொத்தமாக 87.3 சதவீத இந்தியர்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

இந்த ஆய்வின்படி, உடலுக்கு நன்மை செய்யக்கூடிய ‘ஹெச்டிஎல்’ கொழுப்பு 66.8 சதவீத இந்தியர்களுக்குக் குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில், உடலுக்குத் தீமை செய்யக்கூடிய ‘எல்டிஎல்’ (LDL) கொழுப்பு 49.4 சதவீதப் பேருக்கும், ‘ட்ரைகிளிசரைடு’ கொழுப்பு 29.5 சதவீதப் பேருக்கும், மொத்தக் கொழுப்பின் அளவு 22.1 சதவீதப் பேருக்கும் ஆபத்தான அளவில் அதிகமாக இருக்கிறது.

உடல் எடையைப் பொறுத்தவரை, உடல் பருமன் உள்ளவர்களில் 94.3 சதவீதப் பேருக்கு இந்த ரத்தக் கொழுப்புப் பிரச்சனை உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சாதாரண உடல் எடை கொண்ட ஆரோக்கியமாகத் தோன்றும் நபர்களில் கூட 85 சதவீதப் பேருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களில் 89.8 சதவீதப் பேருக்கு இந்த ஆபத்து இருப்பது தெரியவந்துள்ளது.

ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பது எந்தவித வெளிப்புற அறிகுறிகளையும் உடனடியாகக் காட்டாது என்பதால், மருத்துவர்கள் இதனை ஒரு ‘அமைதியான ஆபத்து’  என்று குறிப்பிடுகின்றனர். இது நாளடைவில் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கே ஆபத்தான நோய்களுக்கு முதன்மை காரணமாக அமைகிறது.

இந்த அமைதியான ஆபத்திலிருந்து தப்பிக்க உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் போதிய தூக்கம் போன்ற முறையான வாழ்வியல் மாற்றங்கள் மிக அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே, அனைவரும் உரிய காலத்தில் ரத்தப் பரிசோதனை செய்து, தங்களது கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.