இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கருப்பு தினமாக மைசூரு பிரீமியர் ஸ்டுடியோவில் நடந்த தீ விபத்து இன்றும் கருதப்படுகிறது. ‘தி ஸ்வார்டு ஆப் திப்பு சுல்தான்’ (The Sword of Tipu Sultan) தொடரின் படப்பிடிப்பில் நிகழ்ந்த இந்த விபத்து, திரையுலகில் பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

அதாவது கடந்த 1990-களின் தொடக்கத்தில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வந்த மிகப்பிரபலமான தொடர் ‘தி ஸ்வார்டு ஆப் திப்பு சுல்தான்’. இதன் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நாயகனாக சஞ்சய் கான் பணியாற்றினார். மைசூருவில் உள்ள பிரீமியர் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அந்தச் சமயம் நவீன பாதுகாப்பு வசதிகள் மிகவும் குறைவாகவே இருந்தன.

அப்போது எதிர்பாராத விதமாக செட்டில் தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதால், அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். புகையும் நெருப்பும் சூழ்ந்ததால் வெளியேற வழியின்றி பலரும் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

இந்தக் கோர விபத்தில் சுமார் 52 பேர் உயிரிழந்தனர். நாயகன் சஞ்சய் கான் தீயிலிருந்து தப்பிக்க முயன்றபோது, அவரது உடலில் சுமார் 65 சதவீதத்திற்கும் அதிகமான பாகங்கள் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானது. பல மாதங்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிர் பிழைத்தார். சின்னத்திரை படப்பிடிப்புத் தளத்தில் நடந்த மிக மோசமான விபத்தாக இது இன்றும் பதிவாகியுள்ளது.

இந்தத் தொடரில் நடித்த பிரபல நடிகர் அனந்த் மகாதேவன், சமீபத்தில் ஒரு பேட்டியில் அந்த நாள் குறித்துப் பகிர்ந்து கொண்டார். “அன்று ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்ற உள்ளுணர்வு எனக்குத் தோன்றிப் பயமுறுத்தியது. விபத்து நடந்த பிறகு எங்கும் மரண ஓலம் கேட்டது. உயிர்பிழைத்தவர்கள் தங்களது வீடுகளுக்குத் தொடர்பு கொண்டு ‘நான் உயிருக்கு ஆபத்தில்லாமல் இருக்கிறேன்’ என்று சொன்ன தருணங்கள் மிகவும் உணர்ச்சிகரமானவை” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான், சினிமா மற்றும் தொலைக்காட்சிப் படப்பிடிப்புத் தளங்களில் தீயணைப்பு வசதிகள் மற்றும் அவசர கால வெளியேற்ற வழிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இன்றும் 1990 பிப்ரவரி 25 முதல் 1991 ஏப்ரல் 14 வரை ஒளிபரப்பான அந்தத் தொடரை நினைக்கும்போது, அதன் பிரம்மாண்டத்தை விட அந்தத் தீ விபத்தின் ரணமே பலரது நினைவுக்கு வருகிறது.