குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில், கூகுள் மேப் (Google Maps) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோவில்களில் துணிகரத் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் நவீன திருட்டு முறை போலீஸாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பஞ்ச கோலி. இவரது நெருங்கிய நண்பர் ஜாவேத் கஞ்சி. இவர்கள் இருவரும் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, கிழக்கு கட்ச் மாவட்டத்தின் மோதி ஹமீர்பார் கிராமத்தில் உள்ள கோடியார் மாதாஜி கோவில் மற்றும் ராம்தேவ்பீர் கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து, அங்கிருந்த நகைகள் மற்றும் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், திருடப்பட்ட பொருட்களுடன் இருவர் அடேசர்-சான்வா சந்திப்பு அருகே நிற்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீஸார், அந்த நபர்களைக் கண்காணித்தனர். அவர்கள் திருடிய நகைகளை விற்க முயன்றபோது, போலீஸார் அதிரடியாகச் செயல்பட்டு இருவரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் இருவரும் மோதி ஹமீர்பார் கிராமத்தில் உள்ள கோவில்களில் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் திருடர்கள் கூறிய தகவல் போலீஸாரைத் திகைக்க வைத்தது. கோவில்களை அடையாளம் காண்பது முதல், திருடிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்வதற்கான பாதைகளைத் திட்டமிடுவது வரை, கூகுள் மேப் தொழில்நுட்பத்தை இவர்கள் மிகச் சரியாகப் பயன்படுத்தியது தெரியவந்தது.

தொழில்நுட்பத்தை குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்திய இவர்களின் செயல்முறை குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.