இந்தியாவைச் சேர்ந்த 22 வயது மருத்துவ மாணவன் ஒருவர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்களைக் குறிவைத்து ‘ஏஐ’ (AI) தொழில்நுட்பம் மூலம் ஒரு மிகப்பெரிய மோசடியைச் செய்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

இந்தியாவில் எலும்பு சிகிச்சை நிபுணராகப் படித்து வரும் அந்த இளைஞன், தனது கல்விச் செலவுக்காக ‘எமிலி ஹார்ட்’ (Emily Hart) என்ற பெயரில் ஒரு அழகான பெண் இன்ஃப்ளூயன்சரை ஏஐ மூலம் உருவாக்கியுள்ளார்.

ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் சாயலில் உருவாக்கப்பட்ட அந்தப் பெண், தன்னை ஒரு செவிலியராகவும், தீவிர டிரம்ப் ஆதரவாளராகவும் சமூக வலைதளங்களில் காட்டிக்கொண்டார்.

துப்பாக்கி சுடுவது, பீர் குடிப்பது மற்றும் டிரம்பிற்கு ஆதரவான கருத்துக்களைப் பதிவிடுவது என அந்தப் பக்கம் மிக வேகமாகப் பிரபலமடைந்தது.

இந்தக் கணக்கை ஒரு மாதத்திற்குள் 10,000-க்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்த நிலையில், அதன் ரீல்ஸ் வீடியோக்கள் பல மில்லியன் பார்வைகளைப் பெற்றன. இதை நம்பிய அமெரிக்க ஆண்கள், அந்த ஏஐ மாடலுக்குப் பல லட்சம் ரூபாயைப் பணமாக வாரி வழங்கியுள்ளனர்.

குறிப்பாக, முதியவர்கள் மற்றும் பழமைவாதச் சிந்தனை கொண்டவர்களே இவரது முக்கிய இலக்காக இருந்துள்ளனர். ஒரு நாளைக்குச் சில நிமிடங்கள் மட்டுமே செலவிட்டு, அந்த இளைஞன் மாதம் பல ஆயிரம் டாலர்களைச் சம்பாதித்துள்ளார். “அமெரிக்காவின் மேகா (MAGA) ஆதரவாளர்களை ஏமாற்றுவது மிகவும் எளிது” என்று அந்த மாணவன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.