நேபாள நாட்டின் உள்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்த சுதன் குருங் (Sudan Gurung), தன் மீது சுமத்தப்பட்ட நிதி முறைகேடு புகார்களைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஆண்டு நேபாளத்தில் நடந்த மிகப்பெரிய ‘ஜென் ஜி’ (Gen Z) இளைஞர் போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற இவர், ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டு கடந்த மார்ச் மாதம் அமைச்சராகப் பதவியேற்றார்.
ஆனால், பதவியேற்ற சில வாரங்களிலேயே சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கிய ஒரு சர்ச்சைக்குரிய தொழிலதிபரின் நிறுவனங்களில் இவருக்குப் பங்குகள் (Shares) இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்துப் பிரதமர் பாலென் ஷா (Balen Shah) தலைமையிலான அரசுக்குக் கடும் அழுத்தம் ஏற்பட்ட நிலையில், சுதன் குருங் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டபோது, “எனது பதவி காலத்தின் போது நேர்மையாகவே பணியாற்றினேன். ஆனால், தற்போது எழுந்துள்ள கேள்விகளால் அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், என் மீதான புகார்கள் குறித்து நியாயமான விசாரணை நடைபெறவும் நான் பதவியிலிருந்து விலகுகிறேன்.
எனக்குப் பதவியை விட அறநெறியே (Morality) முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் பாலென் ஷா இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதோடு, தற்போது உள்துறை இலாகாவைத் தன் வசம் வைத்துள்ளார்.
நேபாளத்தில் இளைஞர்களின் பெரும் ஆதரவுடன் உருவான புதிய அரசாங்கத்தில், பதவியேற்ற குறுகிய காலத்திலேயே ஒரு முக்கிய அமைச்சர் விலகியிருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
