“நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்துத் தொகுதி வாரியாகத் தீவிர ஆய்வு செய்வதற்காக தி.மு.க. தலைமை அமைத்த 38 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவிடம், ‘வருகிற தேர்தல்களில் தி.மு.க. தனித்துப் போட்டியிட வேண்டும்’ என்று அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் இக்குழுவினர் களமிறங்கி ரகசிய விசாரணை நடத்தி வரும் வேளையில், அறிவாலயத் தலைமையையே உலுக்கும் வகையிலான புகார்களைத் தொண்டர்கள் கொட்டித் தீர்த்துள்ளனர்.

குறிப்பாக, தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே கட்சியில் நீண்ட நாட்களாகப் புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல்களும், மாவட்ட நிர்வாகிகளுக்கு இடையேயான பிரச்சினைகளும் தலைமை மட்டத்தில் சரிசெய்யப்படாததே இந்தத் தோல்விக்கு முதன்மைக் காரணம் என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, தேர்தல் களத்தில் தங்களோடு கைகோர்த்த கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு மற்றும் களப்பணி தங்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை என்றும், அவர்களின் அலட்சியப் போக்கால் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு நழுவிப் போனதாகவும் தொண்டர்கள் தங்களது குமுறல்களையும் காரசாரமான கருத்துகளையும் இக்குழுவிடம் பதிவு செய்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், தி.மு.க.வின் இந்த ரகசிய ஆய்வுக் குழு ரிப்போர்ட்டில் கசிந்துள்ள விபரங்கள் அறிவாலய வட்டாரத்தில் பெரும் பதற்றத்தையும், தமிழக அரசியல் களத்தில் விவாதப் புயலையும் கிளப்பியுள்ளது.”