திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்த போது, தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவுக்குச் சவால் விடும் வகையில் பேசியுள்ளதற்கு அனல் பறக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளார்.
இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வரும்போது திமுகவால் ஒரு மேயர் பதவியைக் கூடக் கைப்பற்ற முடியாது என்றும், அடுத்த கவுன்சிலராகக் கூட திமுகவினர் வர முடியாது என்றும் ஒருமையில் சவால் விட்டுப் பேசிய ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு அநாகரிகமானது என்று அவர் சாடியுள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்குள் தமிழ்நாட்டை அந்த அளவுக்குச் சீரழித்து விட்டதாகக்கூறி, அடுத்து எத்தனை பேர் ஜெயிப்பீர்கள் என்று பாருங்கள் என ஆதவ் அர்ஜுனா விமர்சித்ததற்கும் திமுக தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ஜெயலலிதா போன்ற தங்களை விடப் பெரிய தலைவர்களின் சவால்களை எல்லாம் பார்த்து முறியடித்த இயக்கம் திமுக என்றும், ஆதவ் அர்ஜுனா ஒவ்வொரு கட்சியாக மாறி மாறிச் சென்றுவிட்டு தற்போது தவெக-வுக்கு ‘ஜால்ரா’ தட்டி வருவதாகவும் டி.கே.எஸ்.இளங்கோவன் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
திடீர் பொறுப்புக்கு வந்துள்ள ஆதவ் அர்ஜுனாவின் சவால்களால் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று குறிப்பிட்ட அவர், வருகிற உள்ளாட்சி தேர்தலில் தவெக-வுக்கு திமுக தக்க பதிலடி கொடுத்து மீண்டும் மாஸ் வெற்றி பெற்று எழுந்து நிற்கும் என்று மிக ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.
