ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் தனது கப்பல் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய இரண்டு சரக்குக் கப்பல்களை ஈரான் கடற்படை அதிரடியாகச் சிறைபிடித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20), சீனாவிலிருந்து ஏவுகணை தயாரிப்பதற்கான பாகங்களை ஏற்றிச் சென்ற ஈரானியக் கப்பல் ஒன்றை அமெரிக்கப் படைகள் தாக்கிச் சிறைபிடித்தன. இதற்குப் பதிலடி கொடுப்போம் என ஈரான் எச்சரித்திருந்த நிலையில், சரியாக 48 மணி நேரத்திற்குள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓமான் கடல் பகுதிக்கு அருகே லைபீரியா மற்றும் பனாமா நாட்டுக்கொடிகளுடன் சென்ற ‘MSC- FRANCESCA’ மற்றும் ‘EPAMINODES’ ஆகிய இரண்டு கப்பல்களை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) சுற்றி வளைத்தது. கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்படையினர், பின்னர் அவற்றை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தவிர, கிரீஸ் நாட்டுக்குச் சொந்தமான மற்றொரு கப்பலும் சிறைபிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச கடல்சார் விதிகளை மீறியதாலேயே இந்தக் கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஈரான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கப்பல்கள் இஸ்ரேலிய “யூத ஆட்சியுடன்” தொடர்புடையவை என்றும் IRGC தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து,  ஜலசந்தியை முழுமையாகக் கட்டுப்படுத்த ஈரான் நாடாளுமன்றத்தில் 12 அம்சத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி: இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள்  ஜலசந்தியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும்.

‘பாரசீக வளைகுடா’ (Persian Gulf) என்ற பெயரை அங்கீகரிக்காத நாடுகளின் கப்பல்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த வழியாகச் செல்லும் கப்பல்களிடம் ஈரானிய கரன்சியான ‘ரியால்’ மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். விதிகளை மீறும் கப்பல்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவற்றில் உள்ள சரக்குகளின் மதிப்பில் 20 சதவீதம் அபராதமாக வசூலிக்கப்படும். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இந்த நேரடி மோதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.