நார்வே நாட்டின் அரச குடும்ப இளவரசியும், அந்நாட்டு அரியணையின் வாரிசான இளவரசர் ஹாகனின் மனைவியுமான 52 வயது மெட்டே மேரிட்க்கு, கடந்த 2018-ஆம் ஆண்டு ‘பல்மோனரி பைப்ரோஸிஸ்’ என்ற நுரையீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அண்மைக் காலமாக அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வரும் நிலையில், தலைநகர் ஓஸ்லோவில் உள்ள மருத்துவமனை அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய கடந்த டிசம்பர் மாதம் பரிந்துரைத்தது.
நோய் தீவிரமடைந்துள்ளதால், முடிந்தவரை விரைவில் இந்த அறுவை சிகிச்சையைச் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், அறுவைசிகிச்சைக்குத் தேவையான நுரையீரல் பெறுவதற்காக, சாதாரண குடிமக்களைப் போலவே இளவரசி மெட்டே மேரிட்டும் காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக நார்வே அரச குடும்பம் நேற்று முன் தினம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாட்டின் இளவரசியாக இருந்தபோதும், தனக்கான விஐபி சலுகைகளைப் பயன்படுத்தாமல், சாதாரண மக்களுக்கு உண்டான நடைமுறைப்படி பதிவு செய்து அவர் நுரையீரலுக்காக் காத்திருப்பது ஒட்டுமொத்த உலக நாடுகள் மத்தியிலும் தற்பொழுது பலத்த பாராட்டுகளையும் கவனத்தையும் பெற்று வருகிறது..
