அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் தங்கள் மண்ணைப் பயன்படுத்த அமெரிக்காவை அனுமதித்தால், அந்த நாடுகள் கடுமையான பதிலடியைச் சந்திக்க நேரிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, துபாயில் உள்ள அமெரிக்கப் படைத் தளங்கள் மற்றும் ஓமான் அருகே சென்ற அமெரிக்க ராணுவ ஆதரவுக் கப்பல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் ராணுவம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இந்த நிலை நீடித்தால் வளைகுடா பிராந்தியம் அமெரிக்கப் படைகளுக்கான கல்லறையாக மாறும் என்றும் ஈரான் ராணுவச் செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார். மறுபுறம், இந்தப் பதற்றத்தைத் தணிக்கப் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், ஈரான் அதிபருடன் தொலைபேசியில் ஆலோனை நடத்தினார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தை அவசியம் என்று வலியுறுத்திய பாகிஸ்தான், இதற்காக சவூதி அரேபியா, எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் அவசரக் கூட்டத்தை இஸ்லாமாபாத்தில் கூட்ட உள்ளது.
ஈரானின் தாக்குதல்களால் வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்த அமைதி முயற்சிகள் சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகின்றன.
