நடிகர் எஸ்.வி. சேகர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, கடந்த மூன்று நாட்களில் தனது வீட்டிற்கு ஐந்து முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் போலீசார் விரைந்து வந்து சோதனை செய்துள்ளனர். இதற்காக காவல்துறை கமிஷனருக்கு நன்றி தெரிவிக்க வந்தேன்,” என்றார் அவர்.
அதன்பிறகு கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற நிகழ்வை விமர்சித்த எஸ்.வி. சேகர், “ஏழு மணி நேரம் தாமதமாக விஜய் வருவது பெரிய தவறு. சினிமா நடிகர்கள் திரையில் காணப்படும் பொம்மைகள் மாதிரியே. திரையரங்கில் அவர்கள் செய்யும் செயல்களை நம்ப வேண்டிய அவசியமில்லை. விஜயின் மேக்கப் கரூரில் உருகி விட்டது,” என்றார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் விலகியதற்கான காரணம் அவருக்கு உணர்ந்த அனுபவம்தான். அவர், ‘வெளியில் தண்ணீரைப் போல தெளிவாக இருக்கலாம்; ஆனால் காலை வைப்பதற்குப் பிறகுதான் உள்ளே என்ன முதலை இருக்கிறது என்று தெரியும்’ எனக் கூறியிருக்கிறார்,” என்றார்.
விஜய்யின் கூட்டத்தில் 27 ஆயிரம் பேர் வந்திருப்பதை நிர்வகிக்க முடியாத நிலையில், அவர் தமிழக மக்கள் அனைவரையும் எப்படி நிர்வகிப்பார் என கேள்வி எழுப்பினார் எஸ்.வி. சேகர். “விஜய் எனக்கு எதிரி அல்ல. ஆனால், தந்தையை மதிக்காமல் புஸ்சி ஆனந்தை மதித்ததிலிருந்து குழப்பம் ஏற்பட்டது. கரூர் விவகாரத்தில் அரசு விஜய் மீது நடவடிக்கை எடுத்து அவரை மேலும் பெரிய ஆளாக்க வாய்ப்பு அளிக்காது. மேலும் ரஜினிகாந்தைப் போலவே விஜயும் பின்னர் அரசியலிலிருந்து விலகி விடுவார்,” என்றும் அவர் தெரிவித்தார்.
