சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற ‘பேராண்டி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.
இந்த விழாவில் பேசிய அவர், “இந்திய அரசியலமைப்பின் அடிப்படையில் ஆட்சி மற்றும் அதிகாரத்தின் மையம் தலைநகர் டெல்லியில்தான் இருக்கிறது. அதனால்தான் பிரதமர் பதவி முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், தமிழர்களில் யாருக்கும் பிரதமராக வேண்டும் என்ற எண்ணமே தோன்றுவதில்லை. இது கவலையளிக்கக்கூடிய விஷயம்,” என்றார்.
அதனை தொடர்ந்து, “தேசிய அரசியலில் தமிழர்கள் ஒரு சக்தியாக மாற வேண்டும். பிரதமர் பதவியை நோக்கி நாம் நகரவேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும். ஏனெனில், ஒரு தமிழர் பிரதமராக வந்தால், ஈழத்தமிழர் பிரச்சனையை தீர்க்க வழி உருவாகும். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது அரசியல் என்பது திரைக்கலைஞர்களின் கவர்ச்சிக்கு உட்பட்டதாகவே காணப்படுகிறது. ஒரு நல்ல படத்தில் நடித்தால் முதல்வர் பதவியோ, அதிகாரமோ சுலபமாக கிடைத்துவிடும் என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது,” என்றார்.
மேலும், தன்னுடைய திரைப்பட அனுபவத்தை பகிர்ந்த திருமாவளவன், “நான் ‘அன்புத் தோழி’ என்ற படத்தில் நடித்திருந்தேன். அதன் பின்னர், ‘மின்சாரம்’ என்ற படத்தில் நடிக்க கோவையை சேர்ந்த ஒரு தயாரிப்பாளர் என்னை அணுகினார். அந்த படத்தில், நான் தமிழ்நாட்டின். முதல்வராக நடிக்கவேண்டும் என்று கூறினார். திரையிலாவது ஒரு நாள் முதல்வராக இருக்கலாம் என்ற ஆசையுடன் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்,” எனக் கூறினார்.
மேலும் ஒரு சில வெற்றி படங்களை கொடுத்தாலே அடுத்தது அரசியல்தான் என சில நடிகர்கள் சொல்கிறார்கள் என திருமாவளவன் பேசினார். இவர் நடிகர் விஜயை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
