ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் கே.பி.எச்.பி காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணா ரெட்டி (45) யூடியூப் சேனலில் பணியாற்றியவர். பல தொழில்களில் தோல்வியடைந்து கடன் சுமையில் சிக்கிய அவர், கடந்த சில மாதங்களாக கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததால், மன அழுத்தத்தில் வாடி வந்ததாக தெரிய வந்துள்ளது. இவரது மனைவி ரம்யா கிருஷ்ணா (38) உடன் கடந்த 17 ஆண்டுகளாக தம்பதியாக வாழ்ந்து வந்தாலும், குழந்தை இல்லை என்பது வாழ்க்கையில் வேதனையை அதிகரித்தது.

இந்நிலையில், கடன் பிரச்சனைகள் காரணமாக தற்கொலை செய்வதற்கான முடிவை இருவரும் சேர்ந்து எடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தங்களை தாங்களே கத்தியால் குத்த முடியாது என்ற பயத்தில், மாறி மாறி ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொள்வதற்கான திட்டத்தை வகுத்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக இவ்வாறு தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் இருவரும் பரிதாபமான நிலையில் இருந்துள்ளனர். இதில் ராமகிருஷ்ணா ரெட்டி தீவிர ரத்தப்போக்கால் உயிரிழந்தார்.

அந்த நேரத்தில் படுகாயமடைந்த ரம்யா கிருஷ்ணா கணவரின் உடலுடன் சோர்வடைந்த நிலையில் சனிக்கிழமை வரை இருந்துள்ளார். வலி தாங்க முடியாமல் தவித்த நிலையில், தானே போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், ராமகிருஷ்ணாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், ரம்யா கிருஷ்ணாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தற்போது அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ராமகிருஷ்ணா எழுதிய சுயசான்று கடிதம் அவரது அறையில் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், “கடன் கொடுத்தவர்கள் தொல்லையால் அவமானங்களை தாங்க முடியவில்லை. இந்த உலகத்தில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் 15 நாட்களுக்கு முன்பே எழுதப்பட்டிருந்தது எனவும், மூன்று மாதங்களுக்கு முன்பே தற்கொலை முடிவை எடுத்ததாக ரம்யா கிருஷ்ணா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது போலீசார் வழக்குப்பதிந்து முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.