மும்பை நகரில் 2006-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கர ரெயில் குண்டு வெடிப்புகள் நாட்டையே அதிரவைத்தன. இதில் 209 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் குற்றம் சுமத்தப்பட்ட கமல் முகமது அன்சாரி உள்ளிட்ட 12 பேரை சிறப்பு நீதிமன்றம் தண்டனை அளித்தது. இதில் அன்சாரி உள்ளிட்ட 5 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், தண்டனை அனுபவித்து வரும் நிலையிலேயே, கமல் முகமது அன்சாரி 2020-ம் ஆண்டு சிறையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கை மீண்டும் பரிசீலனை செய்த மும்பை ஐகோர்ட்டு, அண்மையில் கணிசமான தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், ஆதாரங்களின் பற்றாக்குறை, விசாரணை முறைகள், தவறான சாட்சிகள் என பல காரணங்களால், கமல் முகமது அன்சாரி உட்பட 12 பேரும் இந்த வழக்கில் நிரபராதிகள் என நீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து, அன்சாரியின் குடும்பம் நாக்பூரில் உள்ள அவரது கல்லறைக்கு சென்று கண்ணீர் வணக்கம் செலுத்தினர். அவரது தம்பி ஜமால் அகமது, மரியாதையுடன் நீதிமன்ற தீர்ப்பு நகலை கல்லறை முன் வாசித்தார்.

இந்த நிலைமை குறித்து, வழக்கில் நிரபராதி என விடுவிக்கப்பட்ட டாக்டர் அப்துல் வாகித் சேக் கூறியதாவது, “16 ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. ஆனால் அவர் சிறையில் கழித்த வாழ்க்கையை யாரும் திரும்பக் கொண்டு வர முடியாது. அவரது மனைவியும் குழந்தைகளும் பல்வேறு அவமானங்களுக்கிடையே வாழ்ந்துள்ளனர். இன்றைக்கு தீர்ப்பு வந்தாலும், அவர் இங்கு இல்லையென்பதே மிகப்பெரிய வேதனை” எனக் கூறி உணர்ச்சி பொங்க கூறினார்.